இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட அரிசி ஒரு தொகை நாசம்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு விநியோகம் செய்ய இந்தியாவில் இருந்து இலவசமாக வழங்கப்பட்ட ஒரு டன்னுக்கும் அதிகமான அரிசி,வவுனியா ஆசிக்குளம் பகுதியில் உள்ள அறையொன்றில் ஒன்றரை வருடங்களாக மக்களுக்கு வழங்கப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கடந்த 1ஆம் திகதி பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இந்த கிடங்கில் 1275 கிலோ அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
வவுனியா ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது இந்த அரிசி இருப்பு,காணப்பட்டதுடன்,அது தொடர்பில் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர் .
இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து,அதிகாரிகள் ஆய்வு செய்த போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி தொகையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றை பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்த போது, அந்த அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என்பதை உணர்ந்துள்ளதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கையும் எடுத்துள்ளனர் .