ஆபத்தை உணராது பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு விற்பனை.

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

இந்நிலையில் சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் குறைந்து வருவதால், மக்கள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை வீடியோவில் காண முடிந்தது.

நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் இயற்கை எரிவாயுவை இந்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்புகின்றனர்.

கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் அந்த பையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர்.

பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் ஒரு சிறிய மின்சார பம்ப் உதவியுடன் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இரண்டு சிறுவர்கள் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் இந்த பிளாஸ்டிக் பைகள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சம் ஏற்பட்டாலும், சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏழைகளாகிய எங்களுக்கு வேறு வழியில்லை, என்கின்றனர் மக்கள்.

Leave A Reply

Your email address will not be published.