தீர்வுப் பேச்சு தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிகள் குழுவுக்கு ஜனாதிபதி விளக்கம்!
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய உதவிப் பொதுச் செயலாளர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு நீண்டகால அடிப்படையில் முன்னேறுவதற்கும் நாட்டின் எதிர்காலப் பயணத்தை உறுதி செய்வதற்கும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழு ஏற்றுக்கொண்டது.
நாடாளுமன்ற அரசமைப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நாட்டின் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடத்தும் கலந்துரையாடல் என்பன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதிநிதிக் குழுவுக்கு விளக்கமளித்ததுடன், தூதுக்குழு அந்த நடவடிக்கைகள் தொடர்பில் தமது பாராட்டுகளைத் தெரிவித்தது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழம்பகே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.