நீட் வழக்கில் மேலும் அவகாசம் கோரினால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
நீட் வழக்கில் மேலும் அவகாசம் கோரினால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, நீட் விலக்கு மசோதா இன்னும் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி, இந்த விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரை சுட்டிக்காட்டி மீண்டும் அவகாசம் கோரினால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.