பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் டிரா.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது.
இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.
கேப்டன் பாபர் ஆசம் 27 ரன்களும், ஷான் மசூத் 35 ரன்களும் அடித்தனர். சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது. சவுத் ஷகீல் 146 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அகா சல்மான் 30 ரன்கள் சேர்த்தார்.
பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் அகமது சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் அகமது 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 287 ஆக இருந்தது. ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.
ஆனால், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர். இதன்மூலம் இப்போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்ததால், இத்தொடர் சமனில் முடிந்துள்ளது.
இத்தொடரில் சிறப்பாக ஆடியதுடன், இரண்டாவது போட்டியில் சதம் அடித்த சர்பராஸ் அகமது, பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பற்றியதன் காரணமாக இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது.