கான்பூரில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மாரடைப்பு காரணமாக 98 பேர் மரணம்!
இந்தியாவில் தற்போது குளிர்காலம் என்ற நிலையில், வடமாநிலங்களில் இதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் குளிர் காற்று வீசி வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட், ஆரெஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளிரின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் இடம்பெற்றுள்ள நிலையில், அங்குள்ள கான்பூர் மாவட்டத்தில் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் உள்ள L.P.S இதய மருத்துவமனை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி கடந்த 5 நாள்களில் மட்டும் மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி பாதிப்பால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 44 பேர் மருத்துவ சிகிச்சையின்போதும், 54 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு முன்னதாகவும் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையின் புள்ளி விவரப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 723 பேர் இதய பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளனர். பொதுவாக வயதானவர்களுக்குதான் மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் என நிலை மாறி இந்த குளிர்காலத்தில் இளம் வயதினர் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.
சொல்லப் போனால் பதின் பருவத்தினர்கூட மாரடைப்புக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, வயது வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களும் அதிகாலை வேலையில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தீவிர குளிர் காரணமாக ஒரு வார காலம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.