தமிழ்த் தேசியக் கட்சிகளின் புதிய கூட்டணியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைவு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய கூட்டணியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பில் இருந்து விலகி தனியாகப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தைக் கட்சிகள் எடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்தன.
அந்தக் கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி என்பன ஏற்கனவே இணைந்திருக்கும் நிலையில், தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியும் அதில் இணைந்து கொண்டுள்ளது.
தமிழ் மக்களுக்காக ஆயுதப் போராட்டங்களை மேற்கொண்ட அனைத்துத் தரப்புகளும் இந்தக் கூட்டணியில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளனர்.
மறுநாள் சனிக்கிழமை ஊடக சந்திப்பின் மூலம் கூட்டணியின் சின்னம், பெயர் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும்.
இந்தக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும். கூட்டணியின் சின்னம் கட்சியொன்றினுடையதாகவோ அல்லது புதியதாகவோ இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.