இலங்கை ஜனநாயக நாடுதானா? – உலகம் அவதானிக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடுதானா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் எதிரணியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறையில் நேரடியாகத் தலையிடுகின்றது. நாடாளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. நாடாளுமன்றத்தைச் சபாநாயகர் நிர்வகிக்கவில்லை, நிறைவேற்று அதிகாரமே நிர்வகிக்கின்றது.
நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அரசு செயற்படுகின்றது. நான் எழுதிய சட்டப் புத்தகங்கள் அனைத்தையும் குப்பைத் தொட்டியில் போடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன். இது ஜனநாயக நாடா என்பதை உலகம் அவதானிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் நாட்டுக்கு அவசியம் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தல் சட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா, இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் முன்வைத்த கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமா? இடைநிறுத்தப்படுமா? என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றல் கடமையில் இருந்து விலகுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார். கட்டுப்பணத்தை ஏற்றல் கடமையில் இருந்து விலகுமாறு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அறிவித்ததாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தடையேற்படும் வகையில் செயற்படுவது 3 வருட கால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டது. இது குறித்து வெட்கப்பட வேண்டும்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை ஒரு மாதத்துக்குப் பிற்போடுவதாக நீதி அமைச்சர் இரு முறை வாக்குறுதி வழங்கினார். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சின் பின்னர் அந்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டன” – என்றார்.