நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி… ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இந்திய அணி.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியா 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிவடைந்ததும் ஒருநாள் அணிகளுக்கான கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையின் படி இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் ஆஸ்திரேலியா (112 புள்ளிகள்), 5வது இடத்தில் பாகிஸ்தான் (106 புள்ளிகள்) அணிகள் உள்ளன. 6 முதல் 10 இடங்களில் தென் ஆப்பிரிக்கா (100 புள்ளிகள்), வங்காளதேசம் (95 புள்ளிகள்), இலங்கை (88 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (71 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (71 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன. இந்த போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 111 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.