தேர்தலைப் பிற்போடும் யோசனை இதுவரை இல்லை! – ரணில் தெரிவிப்பு.
“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியாகவும் போட்டியிடுவது தொடர்பில் விமர்சனங்கள் வெளிவருகின்றன. அந்த விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பதிலளித்து நேரத்தை வீணாக்கக்கூடாது. தேர்தல் வெற்றி தொடர்பிலேயே நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் மத்தியில் பிரசாரங்களை உரிய வகையில் முன்னெடுங்கள். வன்முறைகள் தலைதூக்கும் செயல்களுக்கு ஆதரவு வழங்காதீர்கள்.
வன்முறையாளர்களைச் சமூகத்தில் இருந்து நாம் ஒதுக்கிவைக்க வேண்டும். ஜனநாயகவாதிகளுக்கு இந்த நாட்டில் என்றும் மதிப்பு இருக்கும்” – என்றார்.