கல்லூரி மாணவிகள் விவகாரம்.. நிர்மலா தேவி வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு சிபிசிஐடி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை நியூஸ் 18 தமிழ்நாடு பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.
அதில் நிர்மலா தேவி அளித்த பகீர் வாக்குமூலங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, “உயர் அதிகாரிகள் என்பதை ஆளுநர் என்று நிர்மலா தேவி தவறாக புரிந்துகொண்டார். தனது பதவி லாபத்திற்காக மட்டுமே மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல நிர்மலா தேவி திட்டமிட்டிருந்தார்.
வழக்கில் நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேர் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள். அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இதில் தொடர்பு என்பது வெறும் கற்பனையே” என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.