அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்.
74-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண-சாரணியர் மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியகொடி ஏற்றினார்.
நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- பாரத சாரண-சாரணியர் இயக்கத்தில் 10 லட்சம் மாணவர்களை இணைக்கவேண்டும் என்ற இலக்கில் செல்கிறோம். பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்.
மதுரை கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரை கலைஞர் நூலகம் திறக்கப்படும். இதற்கான திறப்பு விழா குறித்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும். நிதி நிலைமை படிப்படியாக சரிசெய்யும் பணியில் முதல்-அமைச்சர் ஈடுபட்டு வருகிறார்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில், 22 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது. காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் ‘ஜி20’ கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துகொள்கின்ற போது தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.