உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்ப முடிவு; அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனுக்கு 31 எம்1 அப்ராம்ஸ் ரக பீரங்கிகளை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உக்ரைன் ராணுவம் தங்கள் எல்லையை தற்காத்துக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்கு இந்த பீரங்கிகள் உதவும் என்று பைடன் கூறினார். இது ரஷியாவிற்கான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்த அவர், ரஷிய ராணுவம் தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு திரும்ப சென்றுவிட்டால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு போர் பீரங்கிகள் வழங்க முடிவு செய்ததன் மூலம் அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவின் சக்தி வாய்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கிம் யோ ஜாங், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா நிற்பதைப் போல, அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா நிற்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்றும் கிம் யோ ஜாங் கடுமையாக சாடினார்.