வடக்கில் பரீட்சை மோசடிக்குத் துணை நின்ற 2 ஆசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு!
வடக்கில் 2021 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் மாணவன் விடை எழுத்துவதற்குப் பரீட்சை மண்டபத்துக்கு வெளியே இருந்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர்கள் இருவரையும் கட்டாய ஓய்வில் செல்வதற்குப் பணிக்கப்பட்டுள்ளது.
தாம் கற்பித்த பாடசாலை அதிபரின் மகன் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் தோற்றினார் என்பதற்காக அவர் விடை எழுத இந்த இரு ஆசிரியர்களும் உதவினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அலைபேசி (மொபைல்) ஊடாக இவர்கள் வழங்கிய விடைகளை மண்டபத்திலிருந்து கேட்டு எழுதிக்கொண்டிருந்த சமயம் மாணவன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விடை எழுதுவதற்கு உதவிய இரு ஆசிரியர்களும் கண்டறியப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பாடத்தின்போது பரீட்சைக் கடமையில் இருந்த ஆசிரியர் தனது தொலைபேசி மூலம் மற்றைய ஆசிரியருக்கு விடைகளைக் கூறியிருக்கின்றார். விடைகளைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவற்றை மாணவனுக்குத் அலைபேசி வாயிலாகத் தெரியப்படுத்தியிருக்கின்றார். பாடசாலை அதிபரின் ஏற்பாட்டின்படியே இந்த மோசடி நடந்தது என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது.
பரீட்சை மண்டபத்தில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவனின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டதோடு அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களுக்கும் இடைக்காலப் பணித்தடை விதிக்கப்பட்டது.
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் விசாரணைகளுக்கு அமைய இரு ஆசிரியர்களுக்கும் தற்போது மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கட்டாய ஓய்வு வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பதில் செயலாளர் வரதீஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ஆசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு தண்டனை வழங்கப்பட்டதை அவர் உறுதி செய்தார்.