நியூசிலாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

லக்னோ மைதானத்தில் இதுவரை 5 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி கண்டு இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அடங்கும். இங்கு நடந்துள்ள 5 இருபது ஓவர் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியை ருசித்து இருக்கிறது.

இதனால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆட்டம் போகப்போக இந்த ஆடுகளத்தின் தன்மை மெதுவானதாக மாறும் என்றும் முதலில் வேகப்பந்து வீச்சும், போகப்போக சுழற்பந்து வீச்சும் எடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), சோதி, லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, பிளேர் டிக்னெர்.

Leave A Reply

Your email address will not be published.