தமிழ்க் கூட்டமைப்பு பிளவு: பின்னணி யார்? – கஜதீபன் விளக்கம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம் என்று புளொட்டின் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து, மல்லாகம் கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அண்மையில் இரண்டு கூட்டங்களுக்காக வடமராட்சி பிரதேசங்களுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மக்கள் வீட்டுச் சின்னத்தை ஒரு சுயேச்சைக் குழு சின்னத்தைப் போல் நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட பல கட்சிகள் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தன.
இப்படியான நிலைமையினால்தான் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சறுக்கல் ஏற்பட்டது. ஆனால், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்களால் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகள், கிளிநொச்சி பகுதிகளிலேயே ஓரளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தன. அப்படியான மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து ஒதுங்கியிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு, ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம். அவர்கள் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழுவினர்தான் தமிழரசுக் கட்சிக்குள் முக்கிய பொறுப்புக்கு வந்து, கட்சியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர்தான், கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராஜாவைத் தோற்கடித்தவர்கள். இப்போது கட்சியை விட்டு ஒதுக்கியுள்ளனர். மாவை சேனாதிராஜாவைத் தோற்கடித்தவர்களை, தற்போது தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேற்ற முயற்சிப்பவர்களை மக்கள் தண்டிக்க வேண்டும்.
அரசியல் தீர்வுக்கான நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பு முடிவெடுத்து, வெற்றியடைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதையும் செய்யாமல் தப்பிக்க, ரணில் அரசுதான் பின்னணியில் இருந்து இதனைச் செயற்படுத்தியது.
இப்போது, சுதந்திர தினத்துக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது போலி நாடகம். கடந்த முறை ரணில் அரசுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்து, குடும்பத்துடன் சென்று சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு, சிங்கக்கொடியை ஏந்திய தமிழரசுக் கட்சித் தலைவர்கள், இப்போது திடீரென ஞானம் வந்து, கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளனர். தேர்தல் வருவதே இந்த ஞானத்துக்குக் காரணம்.
தமிழ் மக்கள் மத்தியில் கே.வி.தவராசா போன்ற நல்ல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்கள் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுகின்றார்கள். இன்னும் சில சட்டத்தரணிகள் பணத்துக்காகச் செயற்படுகின்றார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள்.
நல்லாட்சி காலத்தில் ரணில் அரசுடன் நெருக்கமாக இருந்து, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்த தயாரிப்பில் ஈடுபட்டு, பெருந்தொகை பணத்தைப் பெற்ற நமது சட்டத்தரணிகள் பற்றிய விவரங்களையும் நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்.
தமிழரசுக் கட்சியின் பிரமுகரான சட்டத்தரணி ஒருவர், ரணில் அரசுடன் வெளிப்படையாகவும், கோட்டா அரசில் மறைமுகமாகவும் டீல் பேசி நிறைய பணம் பெற்றிருந்தார். அவரை நெருக்கமாகக் கவனித்தீர்கள் என்றால், எப்பொழுதும் வலது கையை மேசைக்கு கீழே வைத்திருந்து பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார். அது பணம் வாங்கி பழகிய பழக்க தோசம்” – என்றார்.