பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அதிமுக அவைத் தலைவர் கடிதம்..!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை, பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.
அதன்படி, அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் சுமார் 2,675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதை போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் இன்று மாலை 7 மணிக்குள்ளாக எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பிற்கு தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.