குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்க்ரீமில் செத்து கிடந்த தவளை.. மதுரையில் அதிர்ச்சி!
மதுரை டிவிஎஸ் நகர் அருகே மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புச் செல்வம். தைப்பூச தினத்தை முன்னிட்டு இவர் தனது குடும்பம், சகோதரர் குடும்பத்துடன் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். காலை 11 மணியளவில் கோயில் அருகே இருந்த சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துள்ளார்.
குழந்தைகள் ஐஸ்க்ரீமை சாப்பிட தொடங்கிய நிலையில், அதில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது. இதை கண்ட அன்புச் செல்வத்தின் மகள் தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். தவளை கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அன்புச்செல்வன் குடும்பத்தினர், ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளை அருகில் இருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில், கோயில் எதிரே உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் சுகாதாரமற்ற முறையில் தவளை கிடந்த ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஐஸ்க்ரீம் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.