கைரேகை பதிவுகள், ஆதார் விவரங்களை வைத்து வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய்..!
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம் சின்ன சவுக் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி. இவருடைய வங்கி கணக்கில் இருந்து திடீரென்று 89, 550 ரூபாய் மாயமானது.இதுகுறித்து சின்ன சவுக் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் இறங்கினர். தனக்கு எந்த ஓடிபி நம்பரும் குறுஞ்செய்தியாக வரவில்லை என்றும், தான் யாருக்கும் ஓடிபி நம்பரை பகிரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட ராஜசேகர் ரெட்டி போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது போன்ற சைபர் கிரைம் மோசடிகள் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் அதிக அளவில் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சென்ற போலீசார் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டு வரும் அந்தப் பகுதியை சேர்ந்த சேஷ நாத் சர்மா என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
ஆன்லைன் மூலம் பொதுமக்களின் கைரேகைகளை தரவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆதார் தரவுகளைக் கொண்டு வங்கி சேமிப்பை சுருட்டியது தெரியவந்தது. ஒருவருடை ஆதார் எண்ணையும், கைரேகையையும் வைத்து அவரது வங்கியிலிருந்து பணத்தை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும் வங்கி சேவை இல்லாத குக்கிராம மக்களுக்கு பயன்படும் என்பதால் இந்த சேவையை அரசு அனுமதித்துள்ளது.
இதைப் பயன்படுத்தி AEPS என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை இதுவரை சேஷ நாத் சர்மா சுருட்டியது தெரிய வந்தது. இதற்காக IGRS என்ற தளத்திலிருந்து ஒரு லட்சம் வாடிக்கையாளர்களின் கைவிரல் ரேகை பதிவுகளை தரவிறக்கம் செய்து சேகரித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இந்த கைவிரல் ரேகைகளை பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தி குளோனிங் முறையில் உருவாக்கி மோசடிகளில் ஈடுபட்டதை சேஷநாத் சர்மா ஒப்புக்கொண்டார். இதுவரை 440 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
இந்த மோசடியில் விகாஸ், அட்சயா யாதவ் ஆகிய 2 பேர் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேஷநாத் சர்மாவிடமிருந்து ஒரு லட்சம் வாடிக்கையாளர்களின் கை விரல் ரேகை பதிவுகளுடன் கூடிய ஹார்ட் டிஸ்க், ஸ்கேனர், மொபைல் போன், கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி, மானிட்டர், ரப்பரால் தயார் செய்யப்பட்ட கைவிரல் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் பொதுமக்கள் 22,000 பேரின் ஆதார் தரவுகளும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றறவாளிகள் மீது சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 128 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவற்றில் 17 வழக்குகள் தெலங்கானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் விகாஸ், அட்சயா யாதவ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.