எவர் என்னசொன்னாலும் 13 முழுமையாக நடைமுறையாகும்! – ஜனாதிபதி திட்டவட்டம்.
“யார் என்ன சொன்னாலும் எனது பதவிக் காலத்தினுள் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அதில் சந்தேகம் வேண்டாம்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இறுதியாக மகாநாயக்க தேரர்களும் கண்டனம் வெளியிட்டதுடன், முன்னைய ஜனாதிபதிகள் கூட அதனைச் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பியிருந்ததுடன், நேரில் சந்தித்த ஜனாதிபதி ரணிலிடமும் அதனைத் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதன்பின்னரான சுதந்திர நாள் உரையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் எதுவுமே தெரிவித்திருக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில், 13 தொடர்பில் அவரின் தற்போதைய நிலைப்பாட்டை வினவியபோது,
“13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். எனது பதவிக் காலத்தினுள் செய்து முடிப்பேன். அது தொடர்பில் குழம்ப வேண்டியதில்லை” – என்று பதிலளித்தார்.