‘மொட்டு’ ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் நிலை அந்தோகதி! – சஜித் எச்சரிக்கை.
“இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘மொட்டு’ ஆட்சி தொடர்ந்தால் வறியோர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். பெருமளவு மக்கள் பட்டினியால் செத்து மடியும் அவலநிலையும் ஏற்படும்.”
இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் துறைமுகங்கள் மற்றும் வங்கிகளை ஒரு சிறிய உத்தரவு மூலம் மூடிய, இறந்த உடலை முழங்கால்களுக்கு மேல் தூக்குவதைத் தடை செய்த, இரவில் விளக்குகள் ஏற்றுவதைக் கூட தடை செய்த 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளின் பலிக்கடாக்கள் நாட்டைக் கட்டியெழுப்பத் தீர்வுகளை வழங்குவோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இந்த நாட்களில் செயற்படுகின்றனர். 2005 இல் இந்த நாட்டை அழித்த சுனாமி நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சவுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்தவர்கள் குறித்த தரப்பினரே.
1988 மற்றும் 1989 இல் நாடு முழுவதும் இரண்டு கிளர்ச்சிகள் நடந்தபோதும் கூட ரணசிங்க பிரேமதாஸ ஒருபோதும் பொருளாதாரத்தைச் சுருக்குவதற்கு முயற்சிக்கவில்லை. ஒரு தீர்மானத்தை எட்டியதுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஆடைத் தொழிற்சாலைத்திட்டம் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் ஆரம்பித்தார். எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்கள் பக்கம் சிந்தித்தே அவர் செயற்பட்டார்.
ஆனால், தற்போது நம் நாடு கடனைச் செலுத்தாத நாடாக, அரசே பிரகடனப்படுத்தியவாறு வறிய நாடாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் இப்பிரச்சினையில் இருந்து விடுபட பொருளாதாரம் விரிவாக்கல் செய்யப்பட வேண்டுமா? அல்லது பொருளாதாரம் சுருக்கப்பட வேண்டுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
எனினும், தற்போதைய அரசு பொருளாதார வீழ்ச்சிக்கான செயற்பாடுகளையே செய்கின்றது. சந்தைத் தேவையைக் குறைத்து மக்களிடையே புழங்கும் பணத்தைக் குறைத்து, நாட்டில் பணவீக்கத்தைக் குறைத்து, அதன் மூலம் நிலுவை விகிதத்தை வலுப்படுத்த நினைத்தாலும், இதனால் மக்கள் மீது பாரிய வரிச்சுமையே சுமத்தப்படும்.
எதிர்காலத்தில் 45 ஆயிரம் ரூபா வருமானம் ஈட்டுபவர்களுக்கும் வரி விதிக்கப்படும் என ஒரு கதை பரவி வருகின்றது. இதன் காரணமாக, ஏராளமான புத்திஜீவிகள், நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வரிச் சுமையே இதற்குக் காரணம்.
நாட்டில் பாரியளவில் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ள நேரத்தில் சமூகத்தின் பல பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் மின் கட்டணம் 65 – 75 சதவீதம் என இரு மடங்காக உயரும் என்பதால் நாட்டில் பிரச்சினைகள் மேலும் மோசமாகும். இதனால் வறியோர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.
இந்நேரத்தில் நாம் ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தைச் சுருக்காமல் விரிவாக்கல் செய்ய வேண்டும் என்பதுவே அந்த நிலைப்பாடாக அமைய வேண்டும். இதன் ஊடாக மக்களைக் கட்டியெழுப்பல் இடம்பெற வேண்டும். அரசின் இந்த நடவடிக்கையால் பல சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் வீழ்ச்சி கண்டுள்ளனர்” – என்றார்.