சந்திரபாபு நாயுடு மகனுக்கு கை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனர் பணியிடை நீக்கம்!
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ். அக்கட்சியின் தேசிய பொது செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடைபெற இருக்கும் தேர்தலில் கட்சியின் வெற்றியை குறிவைத்து 400 நாட்கள் நடைபெறும் நான்காயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரையை மேற்கொண்டு இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் இருந்து துவங்கப்பட்ட பாதயாத்திரை தற்போது சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதனப்பள்ளி அருகே நாரா.லோகேஷ் பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி லோகேசுக்கு கை கொடுத்தார். மேலும் தன்னுடைய செல் போன் பின்பகுதியில் சந்திரபாபு நாயுடு படங்கள் இருப்பதையும் அவர் லோகேஷிடம் காண்பித்தார். பின்னர் அவரவர் வழியில் இரண்டு பேரும் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று லோகேஷுக்கு கை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்தது.
அரசு போக்குவரத்து கழகத்தின் பணியிடை நீக்க உத்தரவு பற்றி கூறிய நாரா.லோகேஷ் , அரசு இதுபோன்ற சிறிய விஷயங்களை பார்த்து ஏன் பயப்படுகிறது என்று தெரியவில்லை என்று கூறினார்.