திருச்சி சிவாவின் உப்புமா கதை : இது இலங்கைக்கும் பொருந்துகிறதா? (வீடியோ)
“மாணவர்களின் ஒற்றுமையின்மையாலும், வேறுபட்ட கருத்துகளாலும் உப்புமா மீண்டும் வந்தது.” – திருச்சி சிவா
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தி.மு.க எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்று கூறி விமர்சிக்க அவையே சிரிப்பலையில் மூழ்கியது.
தன்னுடைய உரையின்போது உப்புமா கதை சொல்லத்தொடங்கிய திருச்சி சிவா, “ஒரு கல்லூரி விடுதியில் எல்லா நாள்களும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் எரிச்சலடைந்த மாணவர்கள் உப்புமா வேண்டாம் எனப் போராட்டத்தில் இறங்கினர். வார்டனுக்கு என்ன செய்வதென்று ஒரு வழியிலும் தெரியவில்லை. பிறகு வார்டன், `வாக்கெடுப்பு நடத்துகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கூறுங்கள் என்றார்.
வாக்குகளும் எண்ணப்பட்டன. 7 சதவிகித மாணவர்கள் ரொட்டியும், ஆம்லெட்டும் வேண்டுமென்று வாக்களித்தனர். 13 சதவிகிதம் பேர் பூரி கேட்டனர். 18 சதவிகிதம் பேர் ஆலு புரோட்டா கேட்டனர். 19 சதவிகிதம் பேர் மசாலா தோசையும், 20 சதவிகிதம் பேர் இட்லியும் வேண்டுமென்று வாக்களித்தனர். ஆனால், 23 சதவிகிதம் பேர் உப்புமா வேண்டும் என்றனர். இப்போது மீண்டும் உப்புமா. இதுதான் 2019.
மாணவர்களின் ஒற்றுமையின்மையாலும், வேறுபட்ட கருத்துகளாலும் உப்புமா மீண்டும் வந்தது. ஆனால் 2024-க்கான வேலைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி விட்டார். அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்வோம். விடுதியிலிருந்து உப்புமா வெளியேற்றப்படும். மீண்டும் சூழ்நிலை மாறும். அது கூட்டாட்சியாக இருக்கும், மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்டும். இந்த அரசாங்கத்தினுடைய நாள்களின் எண்ணிக்கை தொடங்கிவிட்டன” என்று கூறி முடித்தார்.