அண்ணாமலையை கண்டித்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றம்..!

திருநெல்வேலியில், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாத ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து, இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும், அந்த வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்துவிட்டதாக சிவகங்கையில் அவரது ஆதரவாளர்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர்.

அதிமுக – பாஜக இடையிலான உறவில் விஷம் கலப்பதாக குற்றம்சாட்டி உள்ள அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அண்ணாமலை திரும்பப்பெற கோரியதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பாஜக தரப்பு ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானதாக அறியப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதும், அண்ணாமலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.