திருடனின் தங்கத்தை கபளீகரம் செய்த பொலிஸ் அதிகாரிகள் கைது.
நேற்று (13) பிற்பகல் கண்டியில் இருந்து பாணந்துறை சென்ற , விசேட பொலிஸ் குழுவினால் பாணந்துறை குற்றப்பிரிவின் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கப் பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் கண்டியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விசேட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி விஷேட பொலிஸ் குழுவொன்றின் காவலில் சிக்கி உள்ள சந்தேகநபர் பாணந்துறை தலைமையக பொலிஸாரால் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பாணந்துறை குற்றப்பிரிவின் தலைமையக பொலிஸாரினால் கைப்பற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள தங்கத்தை விட அதிகமான தங்கத்தை தான் கையளித்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரும் சேர்ந்து , சந்தேகநபர் கொடுத்ததாக கூறப்படும் தங்கத்தை தம்வசப்படுத்தியுள்ளதான சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விசேட பொலிஸ் குழு காவலில் எடுத்துள்ளது.
கண்டி விசேட பொலிஸ் குழுவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.