அடுத்தடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டிகள்… அச்சத்தில் உறைந்த பயணிகள்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தெலங்கானா மாநிலம் பி.பி.நகர் அருகே இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எஸ் 4 பெட்டி முதல் பல பெட்டிகள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். பூகம்பம் உண்டானது போன்ற உணர்வு ஏற்பட்டதாக ரயிலில் பயணித்த பயணிகள் கூறினர்.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், மீட்பு குழுவினர் ஆகியோர் விரைந்து சென்று பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி ரயில்வே போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
பல பெட்டிகள் ஒரே நேரத்தில் தடம் புரண்ட காரணத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றிவிட்டு அதே ரயிலில் மற்ற பெட்டிகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.