அதிகாரத்தை மீளக் கைப்பற்ற வீதியில் தேரர்களைக் களமிறக்கிய ராஜபக்சக்கள்! – எதிரணி குற்றச்சாட்டு.
“நாட்டின் அதிகாரத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பௌத்த தேரர்களை மீண்டும் களமிறக்கியுள்ளது ராஜபக்ச குடும்பம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசியல் தீர்வு விடயத்தில் இனவாதத்தை – மதவாதத்தை உண்டு பண்ணாத வேலைத்திட்டத்துடன்தான் நாம் பயணிப்போம்.
நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் பௌத்த தேரர்கள் 2019 இல் வீதியில் இறங்கினார்கள். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றும் தேவையாக அன்று இருந்தது.
இப்போதும் அதிகாரத்தை மீளக் கைப்பற்றுவதற்காக தேரர்களை மீண்டும் களமிறக்கியுள்ளது ராஜபக்ச குடும்பம்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கூறினார், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எப்போதும் எனக்கு ஏசுபவர். இன்றும் ஏசுகின்றார். நாளைக்கும் ஏசுவார். நான் அவருக்கு ஏசுவதில்லை. அநுரவைப் பற்றி நான் கூறப்போனால் அவர் கட்சியிலும் இருக்கமாட்டார்; நாட்டிலும் இருக்கமாட்டார் என்று கூறினார்.
ரணில் மாத்திரம் அறிந்து வைத்திருக்கும் அநுர தொடர்பான அந்த பாரதூரமான இரகசியம் என்ன?
அந்த இரகசியத்தை ரணில் பாதுகாப்பது ஏன்? ரணில் அந்த இரகசியத்தைப் பாதுகாத்து அநுரவிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றார்?
இது பாரதூரமான கூற்று. இதை நாட்டு மக்கள் அறிய வேண்டும். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்ன என்று எல்லோரும் அறிய வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத் தந்திரோபாயமான முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது ஜேவிபி. மக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.