அமெரிக்கா-கனடாவை தொடர்ந்து மேலும் 3 நாடுகளில் பறந்த மர்ம பொருள்.
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. பின்னர் அமெரிக்காவில் வானில் பறந்த மேலும் இரண்டு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே போல் கனடாவிலும் பறந்த ஒரு மர்மபொருள் அமெரிக்கா உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதற்கிடையே இந்தியா உள்பட பல நாடுகளில் சீனாவின் உளவு பலூன் பறந்ததாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மேலும் 3 நாடுகளில் மர்ம பொருள் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் நாட்டின் வான் பரப்புக்குள் சில ஆண்டுகளாக அடையாளம் தெரியாத பொருட்கள் பறந்தது என்றும் அது சீனாவின் உளவு பலூன்களாக இருக்கலாம் என்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 2019-ம் ஆண்டு நவம்பர், 2020-ம் ஆண்டு ஜூன் மற்றும் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் வான்வெளியில் பலூன் வடிவ பொருட்கள் பறந்தது.
அது சீனாவால் பறக்க விடப்பட்ட ஆளில்லா உளவு பலூன்களாக இருக்கலாம் என்று வலுவாக கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ருமேனியா, மால்டோவா ஆகிய நாடுகளில் நேற்று மர்மபொருள் பறந்ததாக தெரிவித்துள்ளன. ருமேனியாவின் வான் எல்லைக்குள் ராட்சத பலூன் போன்று மர்ம பொருள் பறந்தது ரேடாரில் பதிவானது.
இதையடுத்து போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் எந்த பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மால்டோவா நாட்டிலும் மர்மபொருள் பறந்தது. இதையடுத்து இரு நாடுகளும் தங்களது வான் எல்லையை தற்காலிகமாக மூடியது.