அரசு மருத்துவமனைகளில் குறைந்த சிசேரியன் பிரசவங்கள்.. ஆய்வில் வெளியான தகவல்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 மாதங்களில் சிசேரியன் பிரசவங்கள் 3 விழுக்காடு குறைந்துள்ளன.
தமிழ்நாட்டில் தேசிய சுகாதார திட்ட முன்னெடுப்பு காரணமாக சிசேரியன் பிரசவங்கள் தொடர்பான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வின்படி, 2021ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்த சிசேரியன் பிரசவங்கள் 2022ல் 40 விழுக்காடாக குறைந்துள்ளன. அதாவது, கடந்த ஒன்பது மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் 3 விழுக்காடாக குறைந்துள்ளன. தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பிரசவங்களில், 60 விழுக்காடு பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன.
ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை அரசு மருத்துவமனைகளில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 71 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அதில், 60 விழுக்காடு சுகபிரவசங்களும், 40 விழுக்காடு சிசேரியன் பிரசவங்களும் நடைபெற்றுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சிசேரியன் பிரசவமும் எதற்காக செய்யப்பட்டது என அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் விளக்க அறிக்கை கேட்கப்படுகிறது.