ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது.

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் (SLTC) ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று காலை, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை (C-GaPP) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கே அதிகளவில் உள்ளன. இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலேயே இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதில் ஒன்று உப வேந்தரை நீக்கக் கோரி ருஹுணு பல்கலைக்கழகத்திலும் மற்றையது எமது கூட்டுத்தாபனம் ஒன்றின் பொது முகாமையாளரை நீக்கக் கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, பொது முகாமையாளரை பதவி நீக்குவதென்பது அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டதொரு விடயம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். “ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தமைக்காக நாம் அவரை பதவியிலிருந்து நீக்க மாட்டோம்.

அவருக்கு எதிராக ஏதேனும் தீவிரமான குறைபாடுகள் இருப்பதாக அவர்கள் நினைத்தால் அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறை ஒன்று உள்ளது. உப வேந்தர்கள் தொடர்பிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறையொன்று உள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும் அது கூட்டுதாபனம் அல்லது பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது என்பதற்காகவும் இந்த அரசாங்கம் மாறாது. நாம் விதிமுறைகளைப் பின்பற்றி அதன்படியே செயற்படுவோம். ஏனெனில், நான் தற்போது இவற்றை கருத்திற்கொண்டால், அடுத்த தடவை அவர்களுக்கு பீடாதிபதிகள் மற்றும் அதனை தொடர்ந்து திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரையும் பதவி நீக்கும் தேவை ஏற்படும். பின்னர் தங்களைக் கேட்காமல் எம்மால் பேராசிரியர் ஒருவரை நியமிக்க முடியாது என்றும் அவர்கள் எம்மிடம் கூறமுடியும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“இந்தப் பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாம் தீவிரமாக பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்பதை அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு. எமது மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக நாம் பணத்தைச் செலுத்துகிறோம். எனவே பல்கலைக்கழகங்கள் முறையாக செயற்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம். இந்த ஆர்ப்பாட்டம் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவது எனக்கு கவலையளிக்கிறது.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வை கலந்து சிறப்பித்தமைக்காக SLTC ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரஞ்சித் ஜி.ரூபசிங்க நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சுரேன் ராகவன், SLTC ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரஞ்சித் ஜி.ரூபசிங்க, ‘த ஹேக்’ பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகளுக்கான இணைப் பேராசிரியர் ஹோவர்ட் நிக்கோலஸ், புத்திஜீவிகள், உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.