டெல்லி, மும்பை ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்: எலான் மஸ்க் நடவடிக்கை!
செலவினை குறைக்கும் நடவடிக்கையாக, இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு, அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு எலான் மஸ்க் உத்தரிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.
கருத்துகளை நவீனமயமாக்கம் என்ற முறையில் அவரது நடவடிக்கைகள் வெறுப்பு கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் அதிகரிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஏற்கெனவே டிரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது ட்விட்டர் கணக்கை திரும்ப கொண்டுவந்தார் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்திலிருந்து, சுமார் 7,500 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பலர் தாங்களாகவே வெளியேறினர்.
எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று பயனர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பின் முடிவில் 56% ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என தெரிவித்தனர்.
மஸ்க் தோல்வியை ஒப்புக்கொண்டு, தன்னுடைய பதவிக்கு தகுதியானவர் கிடைத்தவுடன் பதவியை விட்டு வெளியேறுகிறேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டரில் தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, இவர்தான் புதிய சிஇஓ எனவும், “புதிய சிஇஓ” “மற்ற நபரை விட மிகவும் சிறந்தவர்.” புதிய சிஇஓ பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என மஸ்க் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ட்விட்டரை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து, உலகெங்கிலும் உள்ள அலுவலகங்களை மூடினார்.
மஸ்கின் செயல்பாடுகள் கவலையை எழுப்பிய நிலையில் நிறுவனத்தை ஸ்திரப்படுத்தவும், பொருளாதார ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவும் இந்த ஆண்டு இறுதி வரை தேவைப்படலாம் என்று மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செலவினை குறைப்பு நடவடிக்கையாக, இந்தியாவில் உள்ள மூன்று அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் அரசியல் மையமான புது தில்லியில் உள்ள அலுவலகம் மற்றும் நிதி வர்த்தக மையமான மும்பையில் உள்ள தனது அலுவலகங்களை மூடியுள்ளது. இந்தியாவில் பெங்களூரு அலுவலகம் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள இரண்டு ட்விட்டர் அலுவலகங்களின் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து வேலையை செய்யுமாறு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.