மர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் பலி: ரகசிய கேமராவில் சிக்கிய நாய்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் பலியான சம்பவத்தில், வனத் துறையினர் பொருத்திருந்த கேமராவில் நாய்கள் வருவது பதிவாகியுள்ளது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கொடும்பப்பட்டி ஊராட்சி சின்ன அருளாப்பட்டியில் வசிப்பவர் கருப்பன்(57). இவர் தனது விளைநிலத்தில் பட்டி அமைத்து அதில் ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
கால்நடைகளை வளர்ப்பதை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வரும் கருப்பன், ஏற்கனவே தனது பட்டியில் இருந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கொன்ற சம்பவத்தால் கடந்த 14-ஆம் தேதி இரவு தனது ஆடுகளை தனது சகோதரர் பழனியாண்டியின் பட்டியில் அடைத்துள்ளார். பட்டியில் 70 ஆடுகள் இருந்த நிலையில், காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கு 23 ஆடுகளை இரவில் பட்டியில் புகுந்த மர்ம விலங்கு கடித்து குதறிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கருப்பன் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்தில் வருவாய்த் துறை மற்றும் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதே விவசாயி கருப்பன் விளைநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் கடந்த நிகழ்வுகளில் கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்து அளித்ததை தவிர விவசாயிக்கு எந்தவித இழப்பீட்டு கிடைக்க நடவடிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை.
படிப்பறிவு இல்லாத விவசாயி கருப்பன் உயிரிழந்த 70-க்கும் மேற்பட்ட ஆடுகளால் முழமையாக இழந்துள்ள தனது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் மர்மவிலங்கு குறித்து விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர் வனச்சரகர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் நிகழ்விடத்தில் வனவர் செல்வேந்திரன் தலைமையில் இரண்டு இடங்களில் மர்ம் விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது.
கடந்த 4 நாள்களாக, அங்கிருந்த கேமராவில் தற்போது ஆடுகள் அடைக்கப்ப்ட்டிருந்த பட்டிக்கு திங்கள்கிழமை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் இரண்டு வருவது பதிவாகியுள்ளது என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.