“குண்டு வைக்க தெரியும் துப்பாக்கியால் சுட தெரியும்” – முன்னாள் ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு..!
கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திருவல்லிக்கேணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர் எங்களுக்கு குண்டு வைக்க தெரியும் துப்பாக்கியால் சுட தெரியும் என அச்சுறுத்தும் வகையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமானது இந்திய ராணுவம், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல, நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள்’ என கூறினார்.
இதனையடுத்து ராணுவ அதிகாரி பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.