சிங்கிளாக இருப்பது ஏன்?… தாடி ரகசியம்… மனம் திறந்த ராகுல் காந்தி..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்.
52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.
எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம். இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம். இத்தாலி பாட்டி 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார். இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன் என்று குறிப்பிட்ட ராகுல், “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.
வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார்.