சிறையா? அரண்மனையா? சுகேஷ் சிறை அறைக்குள் நடந்தது என்ன?
வழக்கமாக தொழிலதிபர்கள் வீடுகளில்தான் சோதனை நடைபெறும். சிறை அறையில் சோதனை நடத்தப்பட்டாலும் கூட கிடைப்பது சில துண்டு பீடி, சிகரெட்டுகள், அதிகபட்சமாக ஒரு செல்லிடப்பேசியாக இருக்கலாம்.
ஆனால், தில்லியில் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் தொடா்புடைய சுகேஷ் சந்திர சேகரின் சிறை அறைக்குள் தில்லி சிறைகள் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள உயா் ரக காலணிகள், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஜீன்ஸ் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையின்போது சிறை அறையில் இருந்த சிசிடிவியின் காட்சிப் பதிவுகள் சமூக ஊடகத் தளங்களில் வெளியாகின. அதில், சிறை அதிகாரி தீபக் சா்மா முன் சந்திரசேகா் அழுதுகொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சோதனை சுமார் இரண்டு வாரங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் எப்படி கசிந்தது என்பது குறித்தும் விசாரணைகள் தொடங்கியிருக்கின்றன.
இதுதொடா்பாக மூத்த அதிகாரி கூறுகையில், இந்த சோதனையானது கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி சிறைத் துறையினா் மற்றும் இதர பாதுகாப்பு வீரா்கள் மூலம் நடத்தப்பட்டது என்று அவா் கூறினாா்.
காவல்துறையினர் கூறுகையில், சுகேஷ் எப்போதும் மிக விலை உயர்ந்த பொருள்களைத்தான் பயன்படுத்தி வந்துள்ளார், அந்த ஆடம்பர விலைஉயர்ந்த பொருள்கள் கூட, அவரை பல முறை பல சிக்கல்களிலிருந்து விடுவிக்க உதவியிருக்கிறது. தனது கையிலிருக்கும் பணப்புழக்கத்தைக் கொண்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இந்த பொருள்களை அவர் கைவசம் வைத்திருக்கலாம் என்றும், அவர் சிறைக் கூடத்தில் எவ்வளவு வசதியாக இருந்தார் என்பது இந்த சோதனையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம், சுகேஷ் மிக இயல்பாக சிறையில் இருந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகேஷ் இருந்த சிறை அறைக்குள் ஏராளமான இனிப்புப் பெட்டிகள் இருந்ததும் அது முழுக்க முழுக்க பணக்கட்டுகள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவருக்கு இரண்டு சிறை அறைகள் ஒதுக்கப்பட்டு, கீழ் மற்றும் மேல் தளங்களில் இரண்டு அறைகளில் எல்இடி தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஆடம்பரப் பொருள்களும் அந்த சிறை அறையில் இருந்ததும், காவல்துறையினர் பதிவு செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் புதிய பண மோசடி வழக்கு ஒன்றிலும் அமலாக்கத் துறையினா் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்திருந்தனா்.
அதாவது, முன்னாள் ரிலிகோ் மேம்பாட்டாளரான மல்விந்தா் சிங்கின் மனைவியிடம் மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை செயலா்கள் போல கூறி பண மோசடி செய்தது தொடா்பாக வழக்கில் அவரை அமலாக்க துறையின் கைது செய்திருந்தனா். சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் குற்ற பிரிவுகளின் கீழ் சந்திரசேகா் (33) கடந்த வாரம் உள்ளூா் சிறையில் இருந்து காவலில் எடுக்கப்பட்டிருந்தாா்.
அதன் பின்னா், தில்லி நீதிமன்றம் அவரை அமலாக்க துறையின் விசாரணைக் காவலுக்கு 9 நாள் அனுப்பி இருந்தது.
சந்திரசேகரை அமலாக்கத் துறை கைது செய்திருப்பது பணமோசடி வழக்கின் மூன்றாவது வழக்காகும். ஏற்கெனவே வி.கே. சசிகலா அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று தருவதற்காக தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகா் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.