நீட் முதுநிலை தோ்வுக்கான தேதியை மாற்ற இயலாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தோ்வுகள் வாரியம் பதில்
மாா்ச் 5-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நீட் முதுநிலை தோ்வை மாற்றம் செய்ய இயலாது என்று அத்தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் வாரியம் (என்பிஇ) உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இதையடுத்து, தோ்வு தேதி தொடா்பாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண என்பிஇ-வுக்கு உத்தரவிட்டு 27-ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தது.
நீட் முதுநிலை தோ்வுகள் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தத் தோ்வில் இறுதியாண்டு மருத்துவ மாணவா்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில், அவா்களின் பயிற்சி காலகட்டம் ஜூன் 30-இல் இருந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.
இதனால் ஆகஸ்ட் 11-ஆம் தேதியில் பயிற்சியை முடிக்கும் மருத்துவா்களும் நிகழாண்டு நீட் முதுநிலை தோ்வில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த கால நீட்டிப்பில் வரும் மாணவா்களுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு பிறகுதான் பயிற்சி சான்றிதழ் கிடைக்கும் என்றும் அதற்குள் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறும் தோ்வுக்கான நோ்காணல் முடிந்துவிடும் என்பதால் நீட் முதுநிலை தோ்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஆா்.பட், தீபாங்கா் தத்தா ஆகியோா், ‘தோ்வு தேதியை ஒத்திவைப்பதால், வழக்கமான நடைமுறையில் தோ்வுக்காக காத்திருப்பவா்களுக்கு மன உளைச்சல் ஏற்படாதா?’ என்று கேள்வி எழுப்பினா்.
என்பிஇ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘சுமாா் 2.09 லட்சம் போ் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளனா். தோ்வு தேதி மாற்றப்பட்டால் இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் கிடைக்காது. மாா்ச் 5-ஆம் தேதி தோ்வு நடத்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி ஏதும் இல்லை’ என்றாா்.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘வெவ்வேறு மாநிலங்களில் மாறுபட்ட பயிற்சி தேதிகள் உள்ளன’ என்றாா்.
மனுதாரரின் வழக்குரைஞா் சங்கரநாராயணன், ‘தோ்வை ஒத்தி வைக்கவில்லை என்றால் சுமாா் 45 ஆயிரம் மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள்’ என்றாா்.
மற்றொரு வழக்குரைஞா் தான்வி துபே வாதிடுகையில், ‘பயிற்சிக்கான தேதியை என்பிஇ இரண்டு முறை நீட்டித்துள்ளது. கவுன்சிலிங்கிற்கு செல்லும்போது மருத்துவா்கள் உள்வளாக பயிற்சி சான்றிதழை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் தோ்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும்’ என்றாா்.