அனுமதியின்றி செயல்பட்ட 18 காப்பகங்கள்.. தமிழ்நாடு அரசு அனுப்பிய அதிரடி நோட்டீஸ்..!
விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த 10ம் தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மன நலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்பட அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை அடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த காப்பகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உள்ளதால் காப்பக உரிமையாளர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 18 காப்பகங்களுக்கும் ஒரு வாரத்தில் விளக்கம் கொடுக்கும் படி தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் புதிய விண்ணப்பத்தை கொடுத்து முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் காப்பகங்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.