விமான நிலையத்தில் கைதான பாதாள கொலைகாரனை தப்ப வைத்தது யார்?

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்ட பாரிய குற்றவாளியான பாதாள உலக  கழுதை முகத்தானை (பூரு மூனா) காப்பாற்ற  இரண்டு பிக்குகள் போலீசாருக்கு கையூட்டு கொடுத்து தப்ப வைத்துள்ளதாகக் கூறப்படும் விடயம் அம்பலமாகியுள்ளதால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரக் கட்டா & பூரு மூனா
ஹரக் கட்டா & பூரு மூனா

 

இச் சம்பவம் தொடர்பாக  மலையக பிரதேசத்தில் வசிக்கும்  இரு பிக்குகளை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் இயங்கி வரும் சக்தி வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரனாக அறியப்படும் ஹரக் கட்டா என அழைக்கப்படும் பாதாள குழு தலைவனின் , பிரதான துப்பாக்கிச் சூடு நடத்துபவராகக் கருதப்படும் மேற்படி சந்தேக நபர் தப்பிச் செல்ல  பெரும் பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அவிசாவளை நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் ஹங்வெல்ல குறுக்கு வீதி பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் அடிப்படையில் கழுதை மூஞ்சானுக்கு பயணத்தடையை பெற்றுக்கொள்ள மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

போபே பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இச் சந்தேகநபர், கைதாகலாம் எனும் அச்சம் காரணமாக ரவிந்து வர்ணசிங்க என்ற போலிப் பெயரில் வெளிநாடு செல்லவுள்ளதாக போலீசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கட்டுநாயக்காவில் வைத்து மாட்டிக் கொண்ட அவரை , கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் 24ம் தேதி மாலை 6:00 மணியளவில் அவர் வெளிநாடு செல்ல இருந்தபோது கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், அவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நேரத்தில் ரத்நாயக்க என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை அழைத்துச் சென்று சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

எனினும் இந்த இரண்டு பிக்குகளும் அதே இரவே போலீஸ் நிலையத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொலிஸ் சார்ஜன்ட் சேனாரத்ன அந்த போலீஸ் நிலையத்தின் பொறுப்பாக இருந்துள்ளார். கைது செய்யப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பூரு மூனா என்ற சந்தேகநபர், இரவில் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்தபோது திடீரென தப்பிச் சென்றதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக சேனாதிர, சார்ஜன்ட் சேனாரத்ன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ரத்நாயக்க மற்றும் குமார ஆகியோர் நேற்று காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், பொலிஸ் பிடியில் இருந்து ஒரு பாரிய குற்றவாளி தப்பிச் செல்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.