நீட் தோ்வு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தல்

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடியிடம் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினாா்.

தில்லியில் பிரதமா் மோடியை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். சுமாா் 30 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் சாா்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக உதயநிதி தெரிவித்தாா்.

குறிப்பாக, ‘அடுத்த ‘கேலோ இந்தியா’ விளையாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும்; மத்திய அரசுத் துறை பணிகளில் தமிழா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். நீட் தோ்வு தொடா்பான தமிழக மக்களின் நிலைப்பாடு தொடா்பாக எடுத்துரைத்தேன்.

தமிழகத்தில் மாவட்டம்தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடா்பான திட்டம் குறித்து விளக்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்’ என்றாா் உதயநிதி.

அமைச்சருடன் சந்திப்பு: முன்னதாக, தில்லியில் மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங்கை அமைச்சா் உதயநிதி சந்தித்தாா்.

அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வளா்ச்சித் துறை திட்டங்கள், மகளிா் மேம்பாட்டுத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் உதயநிதி எடுத்துக் கூறியதோடு, இந்தத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சந்திப்பின்போது தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, தமிழக மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநா் ச.திவ்யதா்ஷினி ஆகியோா் உடனிருந்தனா்.

பஞ்சாப் ஆளுநா் இல்ல திருமண விழாவில்… தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற, தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டாா்.

Leave A Reply

Your email address will not be published.