லயன் சுழலில் சரிந்த இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 76.
பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் பாதியிலேயே ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியை, தொடக்கம் முதலே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் நாதன் லயன் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர் இந்திய வீரர்கள்.
முதல் 32 ரன்களிலேயே ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை லயனிடம் பறிகொடுத்தனர். அதன்பிறகு களத்திற்கு வந்த புஜாரா நிலைத்துநின்று ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதிவரை போராடிய புஜாரா 59 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் சுழலில் சிக்கி வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 163 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்திய அணியின் பத்து விக்கெட்டுகளில் நாதன் லயன் மட்டுமே 64 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.