19 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்கு நீதி விசாரணை….சட்டமன்ற கூண்டில் ஏற்றப்பட்ட 6 போலீசார்!
சட்டப்பேரவையே நீதிமன்றம் போல உருமாறிய நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில சட்டப்பேரவையில் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்திற்கு பாஜகவைச் சார்ந்த மேலவை உறுப்பினர் சலில் விஷ்னாய் உரிமை மீறல் புகார் அளித்த நிலையில், அதை விசாரிக்க சட்டப்பேரவை நீதிமன்றமாக மாற்றப்பட்டது.
2004ஆம் ஆண்டு காலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது கான்பூர் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு சம்பவங்களை கண்டித்து அன்றைய பாஜக எம்எல்ஏவான சலில் 2004 செப்டம்பர் 15இல் தர்ணா போராட்டம் நடத்தினார். மாவட்ட ஆட்சியரை சந்தித்து சலில் புகார் மனு அளிக்க சென்ற போது அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் மோசமான முறையில் லத்தி தாக்குதல் நடத்தி அவமானப்படுத்தியதாக உரிமை மீறல் புகார் அளித்தார்.
சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதற்காக சட்டப்பேரவை நீதிமன்றம் போல மாற்றி விசாரணை கூண்டு அமைக்கப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய 6 போலீசாரையும் கூண்டில் ஏற்றி சபாநாயகர் சதீஷ் மஹானா விசாரித்தார்.காவலர்கள் தங்கள் எல்லையை மீறி செயல்பட்டதால் அவர்களை ஒரு நாள் சிறை வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஒரு அறையை சிறையாக மாற்றி அங்கு 6 காவலர்களும் நள்ளிரவு வரை சிறைவைக்கப்பட்டனர். இரவு 12 மணிக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, நீர் போன்ற வசதிகளை வழங்குமாறு சபாநாயகர் தெரிவித்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
இதற்கு முன்னர் 1989ஆம் ஆண்டு மார்ச் 2இல், பேரவை உறுப்பினர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக அதிகாரிகள் சம்மன் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 34 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் சட்டப்பேரவையில் மீண்டும் நீதிமன்ற பாணி விசராணை நடத்தப்பட்டது.