புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடி விமான நிலையம் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வழியில் காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிப்பு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்தார். அவர்களின் நலன் குறித்தும் விசாரித்தார்.
அப்போது அவர்களிடம் பேசிய முதலமைச்சர், “தமிழகத்தில் பணியாற்றுவதில் உங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. உங்களது பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் உங்களுக்கு துணை நிற்பார்கள்” என உறுதி அளித்தார். அவரிடம் புலம்பெயர் தொழிலாளர்கள், ‘தமிழகத்தில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதே பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்’ கோரிக்கை விடுத்தனர் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர்களிடம் உறுதியளித்த முதலமைச்சர் அங்கிருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டு வரும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.