‘எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பல் பாதுகாப்பான கடல் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டது!
இலங்கையின் கிழக்குக் கடலில் தீப்பிடித்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.டி. நியூ டயமண்ட்’ எண்ணெய்க் கப்பல் பாதுகாப்பாக சர்வதேச கடல் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவற்றின் ஒன்றரை நாள் போராட்டத்தின் பலனாக ‘எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பலில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும், தொடர்ந்தும் புகை வெளியாகிக் கொண்டிருப்பதால், உள்ளே மேலும் வெடிப்புகள் ஏற்பட்டால் கரையை அண்டிய பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தால் குறித்த கப்பலை இலங்கை, இந்தியக் கடற்படையினர் சேர்ந்து சர்வதேச கடற்பரப்புக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
நங்கூரமிடப்படாத குறித்த கப்பல், இலங்கையின் கிழக்குக் கடலில் இருந்து 40 கடல் மைல் தொலைவிலிருந்த நிலையில் ஒன்றரை நாளில் இலங்கையை நோக்கி நகர்ந்து 25 கடல் மைல் தூரத்தை நெருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எண்ணெய்க் கசிவு அச்சம்
2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய் கொள்கலன்களை ஏற்றியிருந்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்தால் கடல் வளங்கள் நாசமாகி, அந்தப் பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் இருந்தது.
அப்படி நேர்ந்தால் கடலில் கசியக்கூடிய பெருமளவு எண்ணெய்யை அகற்றுவது என்பது சிக்கலும் சவாலும் செலவும் மிகுந்த காரியமாகிவிடும். ஆனால், தீ பரவல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் கப்பலில் வெடிப்பு ஏற்படுவதற்கோ அல்லது எண்ணெய் கசிவதற்கோ வாய்ப்புகள் குறைவு என்று இலங்கை கடற்படை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரி ரியர் அட்மிரால் வை.என். ஜயரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கப்பலின் பெரும் பகுதி நீர் மட்டத்திலிருந்து மிகவும் அடியில் இருப்பதால் மசகு எண்ணெய் களஞ்சியம் குளிர்ச்சியாகவே இருக்கும் என்றும், சமுத்திரத்தின் நீர் அழுத்தம் கப்பலில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் என்றும் அவர் கூறினார்.
எனினும், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இலங்கைக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் முன்னெச்சரிக்கையாக உள்ளனர்.
எண்ணெய்க் கசிவின் பாதிப்பைக் குறைக்கக் கூடிய இரசாயனங்களைத் தெளிக்கும் திறன்கொண்ட சிறப்பு விமானம் ஒன்றையும் இந்திய அரசு மத்தல விமான நிலையத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
தற்போது சர்வதேசக் கடலில் உள்ள கப்பல் ஆபத்து எதுவும் இல்லாமல் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அதன் உரிமையாளர் விரும்பும் இடத்துக்கு அதனைக் கொண்டுசெல்ல முடியும் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.