‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோரைக் கொண்டுவர மடகாஸ்கர் செல்லும் சிஐடியினர்
நந்துன் சிந்தக என்ற ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ என்ற சலிந்து மல்ஷித குணரத்னவை விசாரணைக்காக இலங்கைக்குக் கொண்டுவர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று இன்று (மார்ச் 11) மடகஸ்கருக்குச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இரண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் இரண்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குவதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்குத் தேவையான ஒப்புதலை மடகாஸ்கருக்குப் புறப்படும் போலீஸ் குழு பெற்றுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மிஹிந்து அபேசிங்க இந்தக் குழுவின் பிரதானி எனத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் விசேட அதிரடிப்படையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மடகாஸ்கரில் ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு கடந்த 8ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி அவர்களை விசாரணை செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இந்த விசேட பொலிஸ் குழு இன்று (11) மடகஸ்கருக்கு புறப்படுகிறது.
ஹரக் கட்டா, குடு சலிந்து உள்ளிட்ட 8 பேர் கடந்த 1ம் தேதி மடகாஸ்கர் பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
பிப்ரவரி 12 ஆம் தேதி, ஹரக் கட்டா மற்றும் பலர் ‘நொய்பி’ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர், பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் மடகாஸ்கரை விட்டு வெளியேற முயன்றபோது அவர்கள் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைதாகினர்.
‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரக் கட்டா பெரும் பணக்காரர் போல் நடித்து மடகாஸ்கருக்கு செல்வதற்காக இரண்டு சொகுசு கார்களில் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதற்கு முன், ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகிய இருவரையும் துபாய் போலீசார் கைது செய்திருந்தனர். அது ஆகஸ்ட் 11, 2022 அன்றாகும்.
அப்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோரை இலங்கைக்குக் கொண்டுவரத் தயாராக இருந்தும், அவர்களை இலங்கைக்கு ஒப்படைக்க வேண்டி , அதற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி துபாய் பொலிஸார் ஹரக் கட்டாவை விடுவித்தனர்.
இப்போது இலங்கை காவல்துறையால் கொண்டு வரப் போகும் ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோரை என்கவுண்டர் பண்ண உள்ளதாகவும் , அவர்களை பாதுகாத்து இவர்களை இயக்குபவர்கள் குறித்து நீதிமன்றம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு அவர்களுக்கு நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டும். முன்னர் டுபாயில் இருந்து கைதாகி அங்கிருந்து நாடு கடத்திய மாகந்துரே மதுஷ் , என்கவுண்டரில் கொல்லப்பட்டது போல கொல்ல விடக் கூடாது என தர்சண தனது இணைய நேர்காணலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (அந்த சிங்கள நேர் காணல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
இது 2023.03.07ம் திகதி செய்தி
பாதாள உலக தலைவரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் என சந்தேகிக்கப்படும் ஹரக்கட்டா எனப்படும் நடுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் மற்றுமொரு பாதாள உலக தலைவர் என கூறப்படும் சலிந்து மல்ஷித உட்பட ஐந்து பாதாள உலக செயற்பாட்டாளர்கள் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி மடகாஸ்கருக்கு வந்தபோது மடகாஸ்கர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐவருடன் ஹரக்கட்டாவின் கள்ள காதலி என சொல்லப்படும் மலேசிய பெண்யையும் அவரது தந்தையையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மலேசியப் பெண்ணிடம் 38 மில்லியன் ரொக்கப் பணமும் கையிருப்பில் இருந்ததாக அந்த இணையதளம் மேலும் தெரிவித்துள்ளது.
இவர்கள் தனியார் ஜெட் விமானம் மூலம் மடகாஸ்கருக்கு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து விட்டு , இரண்டு வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த போது அந்நாட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்திருந்ததாகவும், மடகஸ்கர் பொலிஸாசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டதும் இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவித்ததாகவும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விசேட பொலிஸ் குழுக்கள் இந்தக் குற்றவாளிகளை கைது செய்தமை தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.