சர்வாதிகார அரசு தேர்தலைக் கண்டு அஞ்சியே தீரும்! – அநுர விளாசல்.
“ஒரு நாட்டில் சர்வாதிகார அரசு தேர்தலைக் கண்டு அஞ்சியே தீரும். அதனையே இந்த அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தலை மக்கள் கேட்கவில்லை என்று அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அது மக்கள் கேட்பதில்லை. அது அரசமைப்பு ரீதியில் நடத்தப்பட வேண்டியதே. மக்கள் தேர்தலைக் கேட்கவில்லை என்று கூறுபவர்கள் தேர்தலை நடத்தப் பணம் இல்லை என்றும் கூறுகின்றனர். இந்த நேரத்தில் இப்படி பணமில்லை என்று தேர்தல் நடக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கும் இப்படிக் கூறிக்கொண்டு திறைசேரியைச் சீர்குலைத்து ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவியில் இருக்கலாம்.
எவ்வாறாயினும் இவர்கள் பணம் இல்லாத பிரச்சினையில் தேர்தலை நடத்த முடியாது என்று கூறவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு அச்சமடைந்தே அவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். இதனால் பணமில்லை என்று கூறும் கதை பொய்யாகும்.
அத்துடன் உள்ளூராட்சி சபைகளில் 8 ஆயிரம் உறுப்பினர்கள் அதிகம் என்றும், அதனைக் குறைக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டு தேர்தலை ஒத்திவைக்கவும் முயற்சிக்கின்றனர். 8 ஆயிரம் உறுப்பினர்களுக்குச் செலவு என்றால் உறுப்பினர்களுக்கான செலவை அரைவாசியால் குறைக்கலாம். அவர்களின் கொடுப்பனவைக் குறைக்கலாம்.
இந்த நேரத்தில் அரசும் சரியான மக்கள் ஆணையுடன் இல்லை. தேர்தலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்கள் ஒவ்வொரு பக்கத்தில் இருக்கின்றனர். இதனால் மக்கள் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் கொண்டு இதனை அறிந்துகொள்ளலாம்” – என்றார்.