அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடி சக்திவாய்ந்த போட்டியாளர் என்று கூறவே இல்லை – நோபல் பரிசு கமிட்டி துணைத்தலைவர்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி சக்திவாய்ந்த போட்டியாளர் என்று தாம் கூறவே இல்லை என்று நோபல் பரிசு கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளர் என்றும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் தான் பிரதமர் மோடியின் மிக பெரிய ரசிகர் என்று ஆஸ்லே டோஜே கூறியதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவியது.
இந்த செய்தி சர்வதேச அரங்கில் விவாத பொருள் ஆனதைதொடர்ந்து, இச்செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எந்தக் கருத்தும் தாம் தெரிவிக்கவில்லை எனவும், ஒரு போலி செய்தி டிவிட்டர் வழியாக பகிரப்பட்டிருப்பதாகவும் ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.
இதைபற்றி மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் எனவும் ஆஸ்லே டோஜே கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு இந்தியாவின் நிலைபாடு சரியானதே. இந்தியா போரை விரும்பவில்லை. தற்போது உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் இவ்வாறு தான் கையாள வேண்டும். உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது என தெரிவித்தார்.