தேர்தல் விரைவில் நடக்கும்; பொறுமையுடன் இருங்கள்! – எதிரணிகளிடம் ‘மொட்டு’ கோரிக்கை.
“எப்படியாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும். எதிரணியில் பொறுமையாக இருந்து செயற்பட வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தலைக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை எவருக்கும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி. வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தமை கவலையான விடயம்.
இது முதல் தடவை அல்ல. கடந்த காலங்களில் எங்களது உறுப்பினர்களும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஊர்வலமாக வரும்போது மரணித்த வரலாறு உண்டு.
ஆனால், ஜே.வி.பி. வேட்பாளர் அரசு தாக்கி மரணிக்கவில்லை. கண்ணீர்ப்புகை காரணமாகவே உயிரிழந்துள்ளார். அடித்து – துன்பறுத்தி மரணிக்கவில்லை.
இருந்தாலும், அந்த மரணம் இடம்பெற்றிருக்கக்கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு.
அவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தால் அவரை அழைத்து வந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
அவரது உயிரைத் திருப்பிக் கொடுக்க முடியாது. கவலையை மட்டும்தான் தெரிவிக்க முடியும். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஊர்வலம் செல்ல முடியாது என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.
ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்ய முடியும். ஊர்வலம் போக முற்பட்ட போதுதான் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எப்படியாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும். அதற்கு நாம் எல்லோரும் தயாராக வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிர்வகிக்க முடியாத சில காரணங்களால் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடக்கும். எதிரணிகள் பொறுமையாக இருந்து செயற்பட வேண்டும்” – என்றார்.