அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சீனாவின் நகர்வுகள்
மத்திய கிழக்கில் பரம வைரிகள் எனக் கருதப்படும் சவூதி அரேபியாவும், ஈரானும் உறவைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
7 வருடங்களாக சீர்குலைந்து போயிருந்த இந்த உறவு சீனாவின் முன்முயற்சி காரணமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் சந்தித்துக்கொண்ட சவூதி அரேபிய, ஈரான் பிரதிநிதிகள் மார்ச் 10ஆம் திகதி பரஸ்பரம் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுக் கொண்டனர். சீன மூத்த இராஜதந்திரி வாங் யி முன்னிலையில் ஈரானிய சுப்ரீம் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் அலி சம்கானி, சவூதி அரேபிய இராஜாங்க விவகார அமைச்சர் முசாட் பின் முகம்மட் அலி அய்பான் ஆகியோர் கைலாகு கொடுத்துக் கொள்ளும் நிழல்படங்கள் பன்னாட்டு ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வெளியாகி இருந்தமையைக் காண முடிந்தது.
இத்தகைய ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தாக இருக்கிறது என்பது தொடர்பில் எந்தவொரு பரபரப்பான செய்தியும் அண்மைக் காலத்தில் ஊடகங்களில் இடம்பிடித்து இருக்கவில்லை. திடுதிப்பென வெளிவந்த அறிவிப்பு ஒரு வகையில் நம்பமுடியாத(?) செய்தியாகவே தென்பட்டது.
அதிலும் சீனாவின் முன்னெடுப்பில் இத்தகையதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, அதற்கு அமெரிக்காவின் நீண்டகால நட்புநாடான சவூதி அரேபியா இணங்கிக் கொண்டது என்பது மேற்குலகின் கற்பனைக்கே எட்டாத விடயம். சவூதி அரேபியாவையும், ஈரானையும் எதிரி நாடுகளாகவே பேணிக்கொண்டு அதற்கூடாக தமது நலன்களை நிறைவேற்றும் எண்ணத்துடன் செயற்படும் அமெரிக்கா, அதன் செல்லப்பிள்ளையான இஸ்ரேல் போன்ற நாடுகளும், அத்தகைய முயற்சிகளுக்குத் தூபம் போடும் பன்னாட்டு ஊடகங்களுக்கும் அதிர்ச்சியான செய்தி இது.
ஏற்கனவே உக்ரைன் போர் தொடர்பில் ரஸ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு உலக நாடுகளைக் கெஞ்சியும் விஞ்சியும் கேட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இந்தச் சேதி இரட்டிப்பு அதிர்ச்சி.
உக்ரைன் விவகாரத்துக்குத் தீர்வுகாணும் நோக்குடன் 12 அம்சத் தீர்வுத் திட்டமொன்றை அண்மையில்தான் சீனா முன்வைத்திருந்தது. உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும் சீனாவின் தீர்வுத் திட்டத்தை உடனடியாகவே நிராகரித்திருந்தாலும், ஏனைய நாடுகளைப் பொறுத்தவரை சீனா மேற்கொண்ட ஒரு சரியான இராஜதந்திரச் செயற்பாடாகவே அது பார்க்கப்பட்டது. அத்தகைய பின்னணியில் சீனாவின் முன்னெடுப்பில் ஈரானும், சவூதி அரேபியாவும் நல்லிணக்கத்துக்குச் சம்மதித்திருப்பது சீனாவின் மற்றொரு ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகின்றது. மறுபுறம், உலக அரங்கில் அமெரிக்காவின் மேலாண்மை சரிகிறதா என்ற கேள்வியையும் தோற்றுவித்து உள்ளது.
சவூதி அரேபியாவும், ஈரானும் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளாயினும் இஸ்லாமிய மதத்தில் உள்ள சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளால் வேறுபட்டு நிற்கின்றன. அது மாத்திரமன்றி, அமெரிக்க சார்பு, அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளிலும் நேரெதிர் நிலைப்பாட்டை உடையனவாக உள்ளன. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மிக முக்கிய நாடுகளாகக் கருதப்படும் இவை இரண்டும் பிராந்திய மேலாண்மையிலும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுபவையாக உள்ளன.
1979ஆம் ஆண்டில் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னான காலகட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் சீரற்றதாகவே இருந்து வந்திருக்கின்றன.
இறுதியாக 2016ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் ஷியா மதகுருக்கள் சிலர் தூக்கில் இடப்பட்ட சம்பவத்தை அடுத்து உருவான கலவரத்தில் தெஹ்ரானில் இருந்த சவூதி அரேபிய தூதுவராலயம் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் அற்றுப் போயின.
தற்போது, இரண்டு வருடங்களாக சீனாவின் மத்தியஸ்தத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த பேச்சுக்களின் முடிவிலேயே ஒப்பந்தம் உருவாகி உள்ளது.
முரண்பாட்டுத் தீர்வு என்பது அண்மைக் காலத்தில் ஒரு கல்விப்புலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முரண்பாடுகளை அறிவியல் பூர்வமாக இனங்கண்டு அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளை முன்வைத்தல் தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் உலக நாடுகளின் மாதிரிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. எனினும், முரண்பாட்டுத் தீர்வு தொடர்பான அணுகுமுறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படவே செய்கின்றன.
கால, தேச, வர்த்தமான நிலைமைகளின் அடிப்படையில் மாத்திரமன்றி மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளின் அரசியல் கொள்கை, நலன்கள் என்பவற்றின் அடிப்படையிலும் அணுகுமுறை மாற்றம் அவதானிக்கப்படுகின்றது.
சரியாகச் சொல்வதானால், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஒரு விடயத்தைக் கையாளுவதிலும், சீனா மற்றும் ரஸ்யா உள்ளிட்ட வல்லரசுகள் அதே விடயத்தைக் கையாளுவதிலும் வித்தியாசம் உள்ளது.
குறிப்பாகச் சொல்வதானால், ஒரு முரண்பாட்டை ஊதிப் பெருப்பிக்கச் செய்து, அதனை ஒரு மோதலாக உருவாக்கி தனது நலன்களைப் பேணிக் கொள்வதும், தனது ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து இலாபம் பார்ப்பதும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் அணுகுமுறை. பதற்றநிலை ஒன்று நிலவினால் மாத்திரமே தனது செல்வாக்கைப் பிரயோகிக்கும் வாய்ப்பு இருப்பதாக மேற்குலகம் நம்புகிறது. நலன்கள் முன்னிலை பெறுகின்ற போது நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது மேற்குலகின் சித்தாந்தம். ஒரு பிராந்தியத்தில் நேச சக்தியாக விளங்கும் ஒரு அமைப்பை மற்றொரு பிராந்தியத்தில் பகைச்சக்தியாக வைத்திருக்க மேற்குலகினால் மாத்திரமே முடியும்.
ஆனால், சீனா மற்றும் ரஸ்யா போன்ற நாடுகளின் அணுகுமுறை வேறு விதமானது. 20ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற சுதந்திரப் போர்களின் வரலாறு ஒன்றே இதற்குச் சாட்சி சொல்லப் போதுமானது. அதன் அண்மைய எடுத்துக்காட்டாக ஈரான் – சவூதி அரேபிய ஒப்பந்தத்தைக் கூறலாம். இந்த ஒப்பந்தம் காரணமாக சீனா அடையப்போகும் நன்மை எதுவும் இல்லை என்பதை எதிரிகள் கூட ஒத்துக் கொள்ளும் நிலையே உள்ளது.
இதே போன்றதொரு ஒப்பந்தம் மேற்குலகின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்றிருந்தால் சமாந்தரமாக பல வர்த்தக ஒப்பந்தங்களும் கூட மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஈரானும் சவூதி அரேபியாவும் உறவுகளைப் புதிப்பிக்க இணங்கியிருப்பதால் மத்திய கிழக்கின் நிலவரம் சடுதியான மாற்றத்தைச் சந்தித்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அதேபோன்று, இத்தகைய ஒரு உடன்படிக்கையை விரும்பாத, சகித்துக்கொள்ள முடியாத வல்லாதிக்க சக்திகள் உடன்படிக்கையைச் சீர்குலைத்து, இரு நாடுகளையும் பகை நாடுகளாக வைத்திருப்பதன் மூலம் தமது நலன்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்ய மாட்டா எனவும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், இந்த உடன்படிக்கை மத்திய கிழக்கில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கின்றது என்பது உண்மை. மத்திய கிழக்கின் எரியும் பிரச்சனைகள் நிலவும் யேமன், சிரியா, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அமைதி திரும்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுவே ஒரு பெரிய விடயம். ஆனால், இந்த நாடுகளில் அமைதி திரும்பினால் அது மீண்டும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் நலன்களுக்குப் பாதிப்பானதாகவே முடியும். அதனை மேற்குலகம் சகித்துக் கொள்ளாது என்பது சொல்லாமலேயே புரியும். அது மாத்திரமன்றி, தமது பகை நாடு எனக் கருதும் சீனாவின் முன்முயற்சியில் இத்தகைய ஒரு நிகழ்வு நடைபெறுவது மேற்குலகுக்குக் கொதிப்பை ஏற்படுத்தும் விடயமாகவே இருக்கும்.
மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுமா அல்லது மேற்குலகின் சதி முயற்சிகள் காரணமாக மீண்டும் கொதிநிலை உருவாகுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய விடயம்.
ஆனால், ஈரான் – சவூதி ஒப்பந்த விடயத்தில் சீனாவுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி கிடைத்துள்ளது. உலகிற்கே நன்மை பயக்கக்கூடிய அத்தகைய வெற்றியை அங்கீகரித்து அதன் நடைமுறைப்படுத்தலுக்கு மேற்குலகம் ஒத்துழைக்கப் போகின்றதா? அல்லது தமது மேலாண்மை சரிவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் வழக்கமான சகுனித் தந்திரத்தைக் கடைப்பிடித்து ஒப்பந்தம் சீர்கெட உழைக்கப் போகின்றதா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.