வியாபாரம் செய்வது அரசின் வேலை இல்லை.. அரசு நிறுவனங்கள் ஏன் விற்கப்படுகின்றன- ரணில்
நாட்டை விரைவான அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்காக அரச நிறுவனங்கள் விற்கப்படுகின்றன… ஜனாதிபதி விளக்கம்
அரசாங்கத்தின் வேலை வியாபாரம் செய்வது அல்ல, மக்களின் நலன்களை ஒழுங்கமைத்து சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதே அரசின் வேலை. நாட்டிலுள்ள வர்த்தகர்கள்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.
வெகுஜன ஊடகங்களின் தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்த போது, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மட்டும் மறுசீரமைக்காது , லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்தது ஏன் என்ற கேள்விக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.
அரசாங்கம் செய்ய வேண்டியது தனியார் துறைகளிடம் வியாபாரம் செய்ய விட்டு விட்டு , அவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதுதான் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கம் ஏன் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளது? அது அரசாங்கத்தின் வேலையல்ல. டீ.எஸ்.சேனநாயக்காவின் காலத்தில் அவ்வாறான ஒரு முறை இருந்ததில்லை. ஆனால் நாட்டில் பணம் இருந்தது. அன்று , இங்கிலாந்துக்கு கடன் கொடுக்கவும், கல்லோயா அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கவும் நாட்டிடம் பணம் இருந்தது.
இப்போது மொரகஹகந்தவை கட்டுவதற்கு சீனாவிடம் பணம் கேட்கிறோம். அரசு நிறுவனங்கள் தொழில் செய்ய வேண்டும் என்று எந்த நாட்டில் சட்டம் உள்ளது? ஒரு நாடாக நாம் வேகமாக வளர்ச்சியடையப் போகிறோம். நாம் மட்டுமே அரசு வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஒரு நாடாக கூறிக் கொண்டு இருக்கிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும்தான் அரசு உள்ளது. இன்று நல்ல கல்வி முறை இருக்கிறதா? கடந்த ஆண்டு கல்விக்கு கொடுத்ததை விட பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அதிக பணம் கொடுத்துள்ளோம். கல்வியை விட மின்சார வாரியத்திற்கு அதிக பணம் வழங்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.சேனநாயக்கவின் பிரதமராக இருந்த காலத்தில், இப்படி இருந்ததே இல்லை.