திமுகவும், அதிமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும் – கே.பி முனுசாமி
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் தொடங்கியது. அப்போது நிதிநிலை அறிக்கை விவாதத்தில், யார் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாகச் செயல்பட்டது என்னும் விவாதம் அதிமுக திமுகவினரிடையே ஏற்பட்டது. நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த அதிமுக உறுப்பினர் கே.பி முனுசாமியை, விரைவாக பேச்சை முடிக்குமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.
அப்போது, உணர்வோடு பேசும்போது அதை தவிர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட கே.பி.முனுசாமி,ஒரு கட்டம் வரை தான் அமைதியாக இருக்க முடியும் என்றும், அதற்கு மேல் எதிர்த்துதான் ஆக வேண்டும் என்றும் கூறினார். எதிர்த்தால் தான் அதிமுக ஆளுங்கட்சியாக வர முடியும் என்றும், திமுக எதிர்க்கட்சியாக வர முடியும் என்றும் கே.பி முனுசாமி குறிப்பிட்டார்.
மேலும், திமுகவும், அதிமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும் என்றும் கே.பி முனுசாமி தெரிவித்தார்.